நான்தான்

நான்தான்

Tuesday, March 4, 2014

ஒன்றேபோல் சிந்திக்கும் சித்தி பெற்றிருக்கும் கவியுள்ளம்

தேர்தலைப் பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை "ஐந்தாண்டுக்கு ஒருமுறை". இக்கவிதை தொன்ம உத்திகொண்டு புனையப்பட்டது ; தமிழ்ச்சூழலில் மிகவும் பிரபலமானது; தமிழ்க்கல்விப்புலச் சூழலில் ஒவ்வொரு புதுக்கவிதை வகுப்பறையிலும் ஒருமுறையேனும் ஒலிக்கப்படுவது.

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)

இக்கவிதையினை அறிந்தோ அறியாமலோ இதே தொன்மத்தினைப் பயன்படுத்தி இதே தேர்தலினைக் குறித்து ஒரு கவிதை செய்திருக்கிறார் மலையாளக் கவிஞர் குரீப்புழ ஸ்ரீகுமார்.

தமிழில் பாரதிபுத்திரனால் மொழிபெயர்க்கப்பட்ட குரீப்புழ ஸ்ரீகுமாரின் தேர்தலறிக்கை என்னும் இக்கவிதை வி.எஸ். அனில்குமாரும் பாரதிபுத்திரனும் இணைந்து தொகுத்த மிளகுக்கொடிகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

ஏழு பகுதிகளாக விரியும் தேர்தலறிக்கை என்னும் கவிதையின் முதல் பகுதி இது.

சோளத்தின் நிறமும்
முட்டைக்கோசின் முகமுமுள்ள
தமயந்தி
கல்யாண மாலையோடு
வாக்குச் சாவடிக்குச் சென்றாள்.
ஐந்து நளன்கள்.
தமயந்தி
எல்லாத் தெய்வங்களையும் வேண்டினாள்
உண்மையான நளன் யாரென்று
அடையாளமில்லாத
ஐந்துபேரும்
போலிகளாயிருந்தனர்

கவியுள்ளம் ஒன்றேபோல் சிந்திக்கும் சித்தி பெற்றிருக்கும் என்பதற்கு இவ்விரு கவிதைகளையும் எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இரண்டு கவிதைகளும் அருமை.

(குரீப்புழ ஸ்ரீகுமாரின் இந்த முழுக்கவிதையும் அங்கதத்தில் தோய்ந்துள்ளது)