நான்தான்

நான்தான்

Tuesday, December 7, 2010

பாபா சாஹேப் டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் - நெஞ்சு பொறுக்குதில்லையே!

[இந்த இடுகையை எழுதியது நண்பர் சிவநாராயண்.]

அம்பேத்கர் படம் சேலம் மாநகரில் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி திரையிடப்படுகிறது என்ற விளம்பரம் பார்த்தேன். நான் என் சக ஊழிய நண்பர்களுடன் போகலாம் என்று முடிவு செய்து அவர்களின் இசைவைப் பெற்றேன். முதலில் அனைவரும் வருகிறேன் என்று கூறினர். சரி! போகலாம் என்று முடிவு செய்து 6ஆம் தேதி போகலாம் என்று முடிவுசெய்தோம். என்ன ஓர் வியப்பு! அன்று தான் திரு அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள். ஆ! மகிழ்ச்சி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் நாட்டு தலைவர்களிடையே போராடிய ஓர் மகானிற்கு நம்மால் முடிந்த நன்றி அவரது படத்தையாவது பார்ப்போம்.

வழக்கம்போல் நம் நண்பர்கள் சிலர் தன் முடிவை மாற்றிக்கொண்டனர். வரவில்லை என்று ம்ம்ம் ... தவிர்க்க இயலாத சூழ்நிலை அவர்களுக்கு. பிறகு என்ன செய்ய, நான் மற்றும் திரு கதிரவன் அவர்கள் மட்டும் போவது என்று முடிவாகியது. நான் சற்று முன்னரே திரையரங்கிற்குச் சென்றேன். அங்கு, டிக்கெட் கொடுக்குமிடத்தில் ஓர் பெரியவர் அமர்ந்து இருந்தார். அவர்தான் டிக்கெட் கொடுக்கப்போகிறார் என்று அவர் அருகில் சென்றோம். நான் மற்றும் ஒரு சிலர் (மொத்தம் 5 பேர்தான்பா)

சிறிதுநேரம் காத்து இருங்கள் படம் போடலாமா! வேணாமான்னு சொல்றேன் என்று அந்தப் பெரியவர் சொன்னார். எனக்குப் புரிந்துவிட்டது. அருகில் உள்ள நபர்களுக்குப் புரியவில்லை. ஒரு நபர் தனது சட்டைப்பையில் இருந்து ரூ 30 ஐ எடுத்து எனக்கு ஓர் டிக்கெட் கொடுங்கள்.

சிறிது பொறுங்கள்! நீங்கள் 5 பேர்தான் உள்ளீர்கள். இன்னும் சில நபர்கள் வந்தால் படம் போடலாம் என்று உள்ளேன் (அவர்தான் திரையரங்க உரிமையாளர்). ஏனெனில் 5 30 = 150 ரூபாய்தான் வரும். ஒரு காட்சிக்கு ஆகும் மின்சாரசெலவே ரூ 450. சிரித்தோம்.

மேலும் அவர், இத்திரைப்படத்தை சேலம் மாநகரில் யாரும் (எந்தத் திரையரங்கும் ) எடுக்கவில்லை. நான்தான் முதலில் எடுத்தேன். [இத்திரைப்படத்தை சேலம் மாநகரில் உள்ள பெரிய திரையரங்குகள் யாரும் எடுக்கவில்லை. இரண்டே இரண்டு சிறிய திரையரங்குகள்தான் எடுத்தன. (தீண்டாமை ஒழிந்து விட்டதா?!)]

என்னால், ஒரு நாள் கூட நான்கு காட்சியைத் திரையிட முடியவில்லை. (அந்த அளவுக்கு மக்களின் ) இன்று, காலைக்காட்சி போடவில்லை. நேற்றும் மதிய காட்சி ரத்து. என்ன செய்வது யாரும் பார்க்கவில்லை. இவ்வாறு அந்த திரையரங்க உரிமையாளர் புலம்பினார்.

ஆம் மக்கள் வந்து பார்க்க இது என்ன எந்திரனா? அம்பேத்கார் படம்தானே!

சிறிதுநேரம் கழித்து, அத்திரையரங்க உரிமையாளர், நீங்கள் தயவுசெய்து அந்த திரையரங்கத்திற்கு சென்று விடுங்கள். இங்கு என்னால் 5 பேருக்காக திரையிடமுடியாது என்றார். கதிரவன் அப்போதுதான் வந்தார். அவரிடமும் நிலையை எடுத்துரைக்க, சரி இருவரும் அந்த இன்னொரு திரையரங்கிற்குச் செல்லலாம் என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஆனால், எங்களுக்கு திரையரங்கம் இருக்கும் இடம் தெரியாது. அப்பொழுது ஓர் பெரியவர் (5 பேர்களில் ஒருவர்) நானும் அங்குதான் போகிறேன். வாருங்கள் என்று கூப்பிட்டார். அவர் சைக்கிளில், நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பைக்கில். சைக்கிளைப் பைக் தொடர்வதா, கஷ்டமாயிற்றே என்று யோசித்தோம். அவருடைய சைக்கிளை அங்கு இருந்த நிறுத்தத்தில் விட்டுவருமாறும் எங்கள் பைக்கில் போய்விடலாம் என்றும் கூறினோம். அவரும் தயங்கியவண்ணம் ஒப்புக்கொண்டார். அவரை என் இருசக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு கதிரவன் தன் வண்டியில் பின்தொடர அந்த இன்னொரு திரையரங்கத்திற்குச் சென்றோம்.

ஆஹா! இத்திரையரங்கில் பரவாயில்லை. கும்பல் இருந்தது. (எங்களையும் சேர்த்து இருபது பேர்!) 18 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு, திரையரங்கிற்குள் நுழைந்தோம். அம்பேத்கர் படம் பார்த்தோம். மகிழ்ந்தோம். மனநிறைவு பெற்றோம். (படம் அன்றே கடைசி)

அதுவரை இடஒதுக்கீட்டை ஏற்காத என் மனம் அப்படத்தைப் பார்த்தவுடன் யோசிக்க வைத்தது. இட ஒதுக்கீடு தற்போது சரியாக பயன்படுத்தப்படுகிறதோ இல்லையோ! அம்மனிதனின் உணர்விற்காக நான் ஏற்றுக்கொள்ள விழைகிறேன்.


இப்படம் நம் தமிழகத்தில் தான் தாமதமாகத் திரையிடப்பட்டு இருக்கிறது. எல்லா மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் என்றோ திரையிடப்பட்டு வெற்றிபெற்ற படம். 3 தேசிய விருதுகளை வாங்கிய படம்.

ஒன்று தெளிவாக உள்ளது. நம்மக்கள் அனைவரும் இன்றளவும் அறிவு அளவில் தாழ்த்தப்பட்டு தான் இருக்கிறார்கள். எத்தனை அம்பேத்கர் வந்தாலும் உயர்த்த முடியாது.

ஓர் இனத்திற்காகப் பாடுபட்ட ஓர் தலைவனின் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலையை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே!

Friday, December 3, 2010

சில மரங்களும் ஒரு ரம்பமும்

கல்லூரி முதலாமாண்டு மொழிப்பாட வகுப்பறையில் உரைநடைப் பாடம் நடத்தும்போது மாணவர்களை எழுந்து நின்று ஆளுக்கொரு பத்தி வாசிக்கச் சொல்வது என் வழக்கம். பெரும்பாலான தமிழாசிரியர்கள் இப்படிச் செய்வார்கள் என்பது என் நம்பிக்கை. இன்றைய மாணவர்களில் பலருக்கும் தமிழ் வாசிக்கத் தெரியவில்லை. அதைக்குறித்து அவர்களில் பலருக்கு எந்தவித வெட்கமும் கிடையாது. எழுந்து நின்று என்னால் வாசிக்கமுடியாது என்று கூறிவிட்டு, தண்டனையாக வகுப்பு முடியும் வரை நின்று கொண்டு இருப்பார்கள்.

ஒருநாள் உரைநடைப்பாட வகுப்பொன்றில் அவ்வையாரின் கல்வியியல் சிந்தனைகள் பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது. பாடத்தின் இடையே

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் அவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறியா

மாட்டாதவன் நன் மரம் (மூதுரை, பாடல் எண் 13)

என்னும் பாடலை நடத்த வேண்டிவந்தது.

கிடைத்தது நமக்கொரு வாய்ப்பு, இந்த மாணவர்களைக் கேலி செய்ய, என்று மனத்துள் நினைத்தவாறு இப்படிச்சொல்ல ஆரம்பித்தேன்.

அவ்வையார் ஒருநாள் விறகு வெட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் விறகுவெட்டக் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தான்.

அவனிடம் அவ்வையார்,

நல்ல மரங்களை எப்படித் தேர்ந்தெடுப்பாய் என்று கேட்டார்.

கிளை பல விட்டு வைரம்பாய்ந்து காட்டுக்குள் இருக்கும் மரங்கள் தான் நல்ல மரங்கள் என்று அவன் தன் அனுபவத்தைக் கொண்டு பதில் கூறினான்.

அதற்கு அவ்வையார் அவனிடம்,

இல்ல தம்பி, அவையெல்லாம் நல்ல மரங்கள் அல்ல. வகுப்பறையில் வாத்தியார் எழுந்து படி என்று சொல்லும்போது படிக்கத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு நிற்கின்ற மாணவர்கள்தான் நல்ல மரங்கள் என்று பதில் சொன்னார்.

(அவ்வையாரைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாசிக்க மறுத்த மாணவர்களை மரமண்டைகள் என்று திட்டி விட்ட மகிழ்ச்சி எனக்கு)

இதனை நான் சொல்லி முடிக்கவும் கடைசிவரிசை இருக்கையிலிருந்து ஒரு குரல் உடனடியாக ஒலித்தது.

நாங்க மரம்னா? ரம்பம் யாரு? என்று.

Wednesday, December 1, 2010

நிரஞ்சனாவும் எலியாய்ப்போன மாமாவும்

2009ஆம் ஆண்டு பிள்ளையார் சதுர்த்திக்கு நானும் நிரஞ்சனாவும்தான் குயவர் வீட்டுக்குப்போய் களிமண்பிள்ளையார் வாங்கிவந்தோம்.

சென்னையிலும் சரி, மதுரையிலும் சரி பிள்ளையார் சதுர்த்தியின் போது வீதிக்கு வீதி சுட்ட களிமண்பிள்ளையார்களும், அச்சில் அழுத்தி அப்போதைக்கப்போது தரப்படும் சுடப்படாத களிமண் அச்சுப் பிள்ளையாரும் விற்கப்படுவார்கள். அச்சுப்பிள்ளையார் வாங்கித்தான் எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவார்கள். கிணற்றில் போட்டால் இயல்பாய்க் கரைந்துபோக அதுதான் சரியாக இருக்கும் என்பது என் அம்மாவின் கருத்து.

ஆனால் சேலத்தில், நாங்களிருக்கும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் களிமண் பிள்ளையாரைத் தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்தது. அச்சில் அழுத்தி எடுக்கப்பட்ட பிள்ளையாரல்ல, கைப்பிடியாய்ப் பிசைந்து பிடிக்கப்பட்ட, பிள்ளையார் மாதிரியான, பிள்ளையார்தான் இங்கு கிடைக்கும். கடந்த ஆண்டு வாங்கியிருந்த அனுபவத்தில், நேரடியாக குயவர் வீட்டுக்குச் சென்று களிமண் பிள்ளையார் வாங்கி வந்தேன்.

என்னுடன் வந்த நிரஞ்சனாவுக்கு நாங்கள் வாங்கிய பிள்ளையாரை மிகவும் பிடித்துப்போயிற்று.

மாமா நான்தான் பிள்ளையாருக்கு குளிப்பாட்டுவேன்; பொட்டுவைப்பேன்; பூவைப்பேன்

என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாள். எல்லாம் எங்கள் அம்மா அவளுக்குச் சொல்லியிருந்தது. வீட்டுக்கு வந்தவுடன்

இப்பவே குளிப்பாட்டுறேன் என்று அடம்பிடித்தாள்.

அதெல்லாம் கிடையாது. சாயங்காலம்தான் குளிப்பாட்டணும்

என்று சொல்லி பிள்ளையாரைக் கொண்டுபோய் பூசையறையில் வைத்து, கதவைச் சாத்திவைத்தாயிற்று.

அப்படியும் எங்களுக்குத் தெரியாமல் பூசையறைக்குப் போய்ப் பிள்ளையாரைத் தூக்கிவர நிரஞ்சனா முயற்சி செய்துகொண்டே இருந்தாள். என் தங்கை பூசையறையில் பிள்ளையார் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இடையில் போய்த் தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்பவர்களை பிள்ளையார் எலியாக மாற்றி விடுவார் என்றும் பயமுறுத்திய பிறகுதான் சற்று ஓய்ந்தாள்.

அப்போது நண்பர் தர்மலிங்கம், தன் வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு ஊருக்குப் போவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்தார்.

நிரஞ்சனாவை வம்பிழுப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எப்படியோ தப்பித்துப்போய் உள்ளே படுத்தவள், அப்படியே தூங்கிவிட்டாள். தர்மலிங்கம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போயாயிற்று.

சிறிதுநேரம் கழித்து விழித்து எழுந்துவந்த நிரஞ்சனா, மீண்டும்

பிள்ளையாரைக் குளிப்பாட்டலாமா என ஆரம்பித்தாள்.

ஏதோ நினைத்தவளாய் தர்மலிங்கம் மாமா எங்கே என்று விசாரித்தாள். இதையே சாக்காக,

தர்மலிங்கம் மாமா, உன்னைய மாதிரிதான், நாங்க சொல்றதக் கேக்காம பிள்ளையாராக் குளிப்பாட்டுறேன்னு சாமி ரூமுக்குள் போனாரு, பிள்ளையார் சாமி அவர எலியா மாத்திட்டாரு

என்று சொல்லிவைத்தோம்.

அவளுக்கு அதிர்ச்சி. பூசையறைக்குள் போக முடியாத வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் தர்மலிங்கம் மாமா எலியானதில் ஒரு சந்தோசம்தான் அவளுக்கு. இனி வம்பிழுக்க மாட்டாருல்ல.

பிறகு சாயங்காலம் அவள் ஆசைப்படியே எங்கள் அம்மா பிள்ளையாரைப் பிடித்துக்கொள்ள, நிரஞ்சனா தன் கைப்பட நீரூற்றி பிள்ளையாரைக் குளிப்பாட்டினாள்; பொட்டுவைத்தாள்; பூவைத்தாள்.

மறுநாள் காலையில் நடந்ததுதான் சுவாரஸ்யம். காலையில் வீட்டுமுன்னிருந்த தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் நிரஞ்சனா. நாங்கள் எல்லாம் அங்குதான் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் வீட்டு வளாகத்தின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. தர்மலிங்கம்தான் வண்டியெடுக்க வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு விரைந்து அவரருகில் ஓடிப்போன நிரஞ்சனா அவரிடம் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

எப்ப மாமா மாறினீங்க?

எங்களுக்குச் சிரிப்பு தாளமுடியவில்லை. தர்மலிங்கம்தான் தான் எலியான கதை தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார்.

Sunday, November 28, 2010

குழந்தைகள் உலகம் - நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

குழந்தைகள் உலகம் குதூகலமானது. அவர்களோடு கலந்துகொண்டு அவர்களின் அறியாமையிலும் அறிவுத்தேடலிலும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்த துயர்நிறைந்த உலகத்தையே மறந்துபோகலாம். குழலினிது யாழினிது எனபர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். தம் மக்கள் பிறர் மக்கள் என்று பிரித்துப் பார்க்காமலே இதை ஒத்துக்கொள்ளலாம். குறும்புசெய்யும் மழலைபேசும் எந்தக் குழந்தையையும் தம்மக்களாகக் கண்டு மகிழலாம். நான் ரசித்த சில குழந்தைக் குறும்புகள் இங்கு உங்களுக்காய்.

நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வு ஒன்றினை எழுதித் திரும்பியிருந்த நாளொன்றின் மாலைப்பொழுது அது. நான், என் தங்கைகள் மூவர், என் மனைவி, என் நண்பர் தர்மலிங்கம் என அன்றைய தேர்வெழுதியிருந்த அனைவரும் என் வீட்டில் கூடியிருந்தோம். காலையில் எழுதியிருந்த தேர்வின் வினாத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான சரியான விடைகளைத் தேடிக்குறித்து எங்கள் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

என் தங்கை அனிதா, தன் மகள் நிரஞ்சனாவைத் தன் மடியில் படுக்கவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.

நிரஞ்சனா, அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். காலையில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் தேர்வுக்குப் போய்விட்ட தன் அம்மா மீதான கோபத்துடன், அம்மா மடியில் தலைவைத்துப் படுத்தவாறு எங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நண்பர் தர்மலிங்கம் கேள்வி எண்களை வாசிக்க, நான் சரியான விடைக்குரிய எழுத்தை (பல்வாய்ப்பு வினாக்கள் – Multiple Choice Questions) B, A, D, A, C என்று கூறிக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் தங்கள் குறித்துக்கொண்டிருந்தார்கள்.

சற்றுநேரம் எங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனா சட்டென்று எழுந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்து உரத்த குரலில்,

“ உங்களுக்கு ஏபிசிடி கூட தெரியலை, உங்களையெல்லாம் யாரு காலேஜ் புரொபசராச் சேர்த்தாங்களோ தெரியலை. A,B, C,D,E,F, . . . , X,Y,Z இப்படித்தான் சொல்லனும். அய்யோ! அய்யோ! எனத் தன் தலையிலடித்துக்கொண்டு மீண்டும் தன் அம்மா மடியில் படுத்துக்கொண்டாள். சற்றுநேரம் ஒன்றும் புரியாமல் விழத்த, எங்களுக்கு புரிபட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தோம்.

நம்ம திட்டினதுக்கு இவங்க ஏன் இப்படிச் சிரிக்கிறாங்கன்னு அப்பயும் அவள், நிரஞ்சனா, எங்களை முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தாள்.

Thursday, November 25, 2010

நூல் அகம் நுழைவது எப்படி?

வீட்டுக்குள் நூல் பல அடுக்கி வைத்து நூலகமாய் மாற்றுவது கூட மிக இயல்பாய் நடைபெற்றுவிடுகிறது. கொஞ்சம் பணமும் நூல் வாங்க மனமும் இருந்தால் போதும், வீடும் ஒரு நூலகமாகும்.

ஆனால் நூல் அகம் நுழைவதுதானே அறிவை விருத்தி செய்யும். அதற்கு என்ன வழி? என்பது புரியவில்லை.

படிக்கலாமென்று நூலைக் கையில் எடுத்தவுடன் வேறுவேலைகள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளி படிக்க உட்கார்ந்தாலும் மனம் அலைபாய்கிறது. நூறுவரிகள் படித்தபின்னும் மனதில் ஒன்றும் நுழைந்தபாடில்லை. நுழைந்தால்தானே தங்குவதற்கு. முதல்வரியை மீண்டும் பார்க்கையில் புதுவரியாகத்தான் தெரிகின்றது.

அருகில் யாரேனும் இருந்து பேசிக்கொண்டிருந்தால் இடையிடையே நம் கவனம் சிதறுவது இயல்பு. ஆனால் ஒருவரும் அருகில் இல்லா நேரத்தும் படிக்கையில் கவனம் சிதறுவதை எப்படித்தடுப்பது? படிப்பு மட்டும் வசப்பட்டுவிட்டால் அதைப்போல வேறு ஒரு ஆழ்நிலைத் தியானம் அமைந்துவிடாது. ஆனால் ஒவ்வொரு முறையும் தியானம் கைகூடுவதில்லை.

சிலநேரங்களில் படைப்பாளி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். புதுப்பெண் கைப்பட்ட நொடிபோல் மனமயங்கித் தொடர்ந்துசென்றால் செவி செவிடாகி மூக்கு முகர்விழந்து சூழல் மறந்து புத்துலகம் புலப்படும் எனில் படைப்பொன்று படைக்கப்பட்ட கணமே படைப்பாளி இறந்துவிடுகிறான் என்பது எப்படி?

பெரும்பாலான நூல்கள் அகம் நுழைய முடியாமல் மேசையின்மீதே அல்லது கட்டிலின் ஓரத்தில் கிடக்கின்றன. சிலநாட்கழித்து அலமாரியில் ஏறி அடுக்குகளுக்கிடையே மறைந்தும் போகின்றன.

நன்றாகப் படித்துவிட்டதாய் எண்ணி எடுத்துவைக்கப்பட்ட புத்தகத்தையும் பலநாள் கழித்து எடுத்துப் பார்க்கும்போது இந்த நூல் நாம் படித்த்துதானா என்னும் ஐயத்தைக் கிளப்புவதாய் அமையும் மனம் ஒரு சாபக்கேடு.

பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை பசியாறும் முனிவனின் இரையை கனியைச் சிதைத்ததால் சாபம்பெற்றோம் சபித்தவன் பசித்த முனிவன்தான் என்பது காயசண்டிகைக்குத் தெரிந்திருந்தது. நாமென்ன பிழை செய்தோம் பலமுறை படித்தாலும் அகம் நுழையாச் சாபத்தை நமக்கு எவன் தந்தான் என்று எண்ணத்தான் தோன்றுகிறது அகம் நுழைய மறுக்கும் நூல்களைக் காணும்போது.

Wednesday, November 24, 2010

சிவநாராயணும் சாரு நிவேதிதாவும்

சிவநாராயண் என் நண்பர். கல்லூரியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்.

சில திரைப்படங்களைப் பார்க்குமாறு எனக்கு அவர் அறிவுறுத்தினார். அமீர்கானின் ரசிகரான அவர் லகான் திரைப்படத்தைப் பார்க்குமாறு கூறினார். எனக்கு இந்தி தெரியாது என்று கூறியபோது ஆங்கில அடிக்குறிப்புகள் இருக்கும் என்றார். பார்த்தேன். படம் பிடித்திருந்தது.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படம் வெளியானபோது நண்பர்களோடு சேர்ந்துசென்று பார்த்தோம். சிம்புதேவனின் இம்சை அரசன் ஏற்படுத்திய ஆர்வம் படம் வெளியாகும் நாளை நோக்கி எங்களைக் காத்திருக்கவைத்திருந்தது. படம் வெளியாகி ஒரு வாரம் சென்றுதான் பார்க்க முடிவுசெய்திருந்தோம். அதற்குள் வேறு நண்பர்கள் படம் சரியில்லை என்றும் பத்து நிமிடத்திற்கு மேல் உட்கார முடியவில்லை என்றும் கூறி தயவுசெய்து அந்தப்படத்திற்குப் போய்விடாதீர்கள் என்று எங்களை மிரட்டினார்கள். சிம்புதேவனை நாங்கள் நம்புவதாகச் சொல்லி எங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் சென்று படத்தைப் பார்த்தோம். காட்சிக்கு காட்சி வரிக்குவரி எங்களால் ரசிக்க முடிந்தது. சிம்புதேவனின் ஏளனத்தைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு தற்கால அரசியல் பற்றிய நோக்கும் அதனோடு இணைத்துப்பார்க்கும் தெளிவும் அவசியம் என்பதால் மற்றவர்களுக்கு இப்படத்தோடு இணைந்து ரசிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அதற்குப்பிறகு நாங்கள் இணைந்து பார்க்க முடிவு செய்த படம் எந்திரன். சிறுவயதில் ரஜினி ரசிகர்கள் என்பதாலும் ஷங்கரின் பிரம்மாண்டம் கவரக்கூடியது என்பதாலும் எந்திரன் பற்றிய எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எந்திரனுக்கான விளம்பரம் எரிச்சலூட்டுவதாக இருந்தது என்றாலும் படம் வெளியான முதல்வாரம் சென்று படம் பார்த்தோம். படம் ரசிக்கக் கூடியதாய்த்தான் இருந்தது.

உயிர்மை இதழில் சாரு நிவேதிதா எந்திரனைப் பற்றி எழுதியிருந்த எதிர்வினைக் கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நானெல்லாம் சாப்பிடுகிற வேளையில் அந்தச் சாப்பாடு சுவையானதாக இருக்கிறதா என்று பார்ப்பேனே தவிர இது அம்மா சமைத்தது போல் இல்லை என்றோ அல்லது இதைவிட எதிர்வீட்டு மாமி சுவையாகச் சமைப்பாள் என்றோ நினைத்துப் பார்ப்பதில்லை. சாரு பல படங்களுடன் ஒப்பிட்டு எந்திரனைக் குப்பை என்றார். ஷங்கர் ரஜினியை அவமானப்படுத்திவிட்டார் வீணடித்துவிட்டார் என்றெல்லாம் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை சிவநாராயணிடம் கொடுத்தேன். படித்து விட்டு "சாருவின் யோக்கியதை எனக்குத் தெரியாதா" என்று கத்தினார்.

ஒருவர் ஒரு விஷயத்தில் எரிச்சல்படுகிறார் என்றால் அவரை மீண்டும் மீண்டும் எரிச்சல்படுத்திப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். அண்மையில் சாருவின் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது 'லகான் ஒரு குப்பை' என்று கூறியிருந்தார். 'ஆஸ்காருக்கு லகான் போவது இந்தியர்களுக்கு வெட்கக்கேடு' என்றும் கூறியிருந்தார். நான் இந்தப் பக்கத்தையும் சிவநாராயணிடம் காண்பித்தேன். மீண்டும் கத்தத்தொடங்கினார்.

"சாரு பற்றி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டது எப்ப தெரியுமா. முந்தி எல்லாம் எனக்கும் சாரு பிடிக்கும். அவர் நித்யானந்தரைப் பற்றி உயர்வா எழுதிக்கிட்டிருந்ததைப் படிச்சிருக்கேன். விஜய் டிவி நீயா நானாவில வந்து உட்கார்ந்து தான் ஏன் நித்யானந்தரோட சிஷ்யனா இருக்கேன்னு விளக்கம் சொல்லிக்கிட்டிருந்தார் சாரு. ஆனா அதே சாரு நித்யானந்தர் மாட்டிக்கிட்டதும் அதே விஜய் டிவில வந்து உட்கார்ந்து நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததைப் பற்றி வெட்கப்படுவதாய் விளக்கம் கொடுத்துக்கிட்டிருந்தார். அவர் நல்லா இருக்கிறப்ப இவர் பெருமைப்படுவாராம் அவர் கேவலப்பட்டுப்போனார்னா இவர் வெட்கப்படுவாராம். ஏன் இவருக்கு முன்னாடியே தெரிஞ்சுக்க முடியல. எல்லாம் தான் உத்தமன்னு போடுற நாடகம்

இது சிவநாராயணோட வாதம்.

ஆனா ஒரு விஷயம் நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததற்கு வெட்கப்பட்ட சாருவைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. எத்தனையோ பேர் இன்னும் நித்யானந்தர நம்புறாங்களே.

எந்திரனைக் குப்பைன்னு சொன்னாலும் லகானைக் குப்பைன்னு சொன்னாலும் எனக்கு சாரு மேல கோபமோ கருத்து வேறுபாடோ கிடையாது. சாருவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. சாருவின் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும். மாதம் ஒன்று என வாங்கத்தான் என்னால் முடியும் என்பதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் பெரும்பாலும் படித்து விட முடிவு செய்துள்ளேன்.