நான்தான்

நான்தான்

Monday, February 1, 2016

அழுத்திக் கிடந்தாலும்ஆயிரமாய் முகங்காட்டிஆங்காரமாய்ச் சீறும்அவனுக்கு





அவளுக்கோ
ஒற்றை விரலோரம்

சுருண்டொளிந்திருக்கும்
நெளிமோதிரம்






அந்தப் பாம்பு.








செந்தலைக்குருவியில் வெளிவந்த கவிதை

Wednesday, October 29, 2014

ஹார்லிக்ஸ் தமிழர்கள்


ஹார்லிக்ஸ் தோன்றிய கதை தெரியும் உங்களுக்கு.
ஹார்லிக்ஸ் என்னும் பெயர் தோன்றிய கதை தெரியுமா? ஹார்லிக்ஸ் தயாரிப்புமுறையினைக் கண்டறிந்தவர் ஒரு தமிழர் என்பது தெரியுமா? அதற்கு இந்தப் பெயர் வரக்காரணம் அண்ணன்தம்பிகளான இரண்டு தமிழர்கள் என்பது தெரியுமா?
இருநூறாண்டுப் பழைய கதையினைத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழர் வரலாற்றினை நினைவுபடுத்திக்கொள்ளவும் பெருமிதம் கொள்ளவும் எண்ணுபவர்கள் இதனைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் வரலாறு ரொம்ப முக்கியம்.
இன்றைய சிவகங்கையில் உள்ள சூரவத்தி என்னும் கிராமத்தைச் சார்ந்த அண்ணன் தம்பிகள் இருவர். சந்தனராயன், சங்கிலிராயன் என்னும் இவர்கள் இருவரும் பிழைப்பு தேடி பர்மாவின் ரங்கூன் நகரத்துக்கு சுமைகூலிகளாகப் போனவர்கள்.
ரங்கூனிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்ற கப்பல்களில் வேலை கிடைக்கவும் அங்கு சென்றனர். இவர்கள் இருவரின் கட்டுடலையும் களைப்பின்றி உழைக்கும் திறனையும் கண்ட அமெரிக்கர் ஒருவர் தன் குதிரைப்பண்ணையில் வேலைசெய்ய அழைத்துச்சென்று விட்டார். அவர்கள் அமெரிக்க ஆங்கிலத்தைக் கூடியவிரைவில் கற்றுத்தேறிவிட்டனர்.
அங்குதான் ஹார்லிக்ஸ் பிறந்தது.
நம்மூரில் இருக்கும்போது தாயார் தயாரித்துக்கொடுத்த சத்துமாவினைத் தின்று வளர்ந்திருந்த இருவரும் அமெரிக்காவில் குதிரைப்பண்ணையில் வேலைபார்க்கும்போது அங்கு கிடைத்த மால்ட்டைக் கொண்டு தங்களுக்கு சத்துமாவினை உருவாக்கிக்கொண்டனர்.
தாங்கள் உண்டு மகிழ்ந்த சத்து்மாவினைக் குதிரைகளுக்குக் கொடுத்தால் அவையும் ஊட்டச்சத்துடன் வளரும் என நினைத்த சந்தனராயன், சங்கிலிராயனிடம் அந்தப்பொறுப்பினை ஒப்படைத்தார்.
முதலில் எந்தக்குதிரையும் அந்தச் சத்துமாவினை சாப்பிடவில்லை. மனந்தளராத சங்கிலிராயன் மீண்டும் மீண்டும் முயன்றார். சத்துமாவோடு வேறு சில பொருட்களைச் சேர்த்துக் கொடுத்துப் பார்த்தார்.
ஒருநாள் அவருடைய முயற்சி வென்றது. அதுவரை முகத்தைத்திருப்பிக்கொண்டு போன ஒரு குதிரை நக்கிப் பார்த்தது.
குதிரைப்பண்ணை எழுத்தராகப் பதவி உயர்வுபெற்றிருந்த சங்கிலி ராயன் அந்தச் சத்துமாவினைத் தயாரிக்கும் முறையில் ஒரு குறிப்பேட்டில் எழுதி அருகில் Hors licks என எழுதிவைத்தார்.
அடுத்த நாள் சத்துமாவில் மற்றொரு மாற்றம் செய்திருந்தார். இன்று மற்றொரு குதிரை நக்கியது. அந்தக்குதிரை அந்த வீட்டு முதலாளியம்மாவின் குதிரை. எனவே அந்தச் சத்துமாவு தயாரிப்புமுறையை mother’s hors licks என்று குறிப்பெழுதி வைத்துக்கொண்டார்.
அடுத்த நாள் மற்றொரு மாற்றம். அந்தப் பண்ணை முதலாளியின் இளைய மகன் ஜேம்ஸின் குதிரை நக்கியது. எனவே junior's hors licks என்று எழுதிக்கொண்டார்.
அடுத்தடுத்த நாட்களில் ஒரு அடர்பழுப்பு நிறக்குதிரையும் பழுப்புநிறக் குதிரையும் பந்தயத்துக்காக சரிவிகித உணவு வழங்கப்பட்ட ஒரு குதிரையும் நக்கிச் சென்றன. சங்கிலிராயன் அவற்றைத் தயாரிக்கும் முறைகளையும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டார்.
Choclate Hors licks.
Choclate Malt Hors licks.
Diet Hors licks.
குதிரைக்கிடைக்குச் சென்றிருந்த சந்தனராயன் திரும்பிவந்ததும் தம்பியின் விடாமுயற்சியையும் வெற்றிச்செய்தியையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். குறிப்புகளைப் பார்வையிட்டார்.
தம்பியின் ஆங்கிலம் குறைவுடையதாக இருந்ததைக் கண்டித்துத் திருத்தினார். ஒருமை பன்மை மயக்கம் வரக்கூடாது தம்பி என்றும் Hors licks என்று எழுதுவது தவறு என்றும் கூறிய அவர் Hor licks எனத்திருத்தி எழுதச்சொன்னார்.
அண்ணனின் ஆங்கில அறிவை வியந்த சங்கிலிராயன் அவ்வாறே குறிப்புகளை மாற்றி எழுதினார்.
ஜேம்ஸ் ஒருநாள் இந்தச் சத்துமாவினை ருசிபார்த்தார். அவருக்கு இது மிகவும் பிடித்துப்போயிற்று. சந்தனராயன் சங்கிலிராயனை அழைத்து அந்த மாவின் செய்முறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
தனது குடும்பத்தினருக்கு அந்தச் சத்துமாவினை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் பின்னர் அதனை தன் ஊராருக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தார். சங்கிலிராயனை மதித்து ஹார்லிக்ஸ் என்ற பெயரிலேயே விற்க ஆரம்பித்தார்.
ஹார்லிக்ஸ் விற்க ஆரம்பித்து பிரபலமானதால் அவருடைய குடும்பமே ஹார்லிக்ஸ் குடும்பம் எனப் பெயர்பெற்றது.
பிற்காலத்தில் ஜேம்ஸ் ஹார்லிக்ஸின் பெயரன்கள் வில்லியம்ஸ் ஹார்லிக்ஸூம் ஜேம்ஸ் ஹார்லிக்ஸூம் தயாரிப்புமுறையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி தயாரித்து குப்பிகளில் அடைத்து பலவகையான விளம்பரங்களைப் பயன்படுத்தி முதலில் அமெரிக்கா முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் என சந்தைப்படுத்தி உலகத்திலுள்ளோர் அனைவரையும் சத்துள்ளவர்களாக மாற்றியது நீங்கள் அனைவரும் அறிந்த கதையே.
படிப்படியாக சங்கிலிராயனின் மற்ற செய்முறைகளையும் தயாரித்துச் சந்தைப்படுத்தி சங்கிலிராயன் வைத்த பெயர்களையே அவற்றிற்குச் சூட்டி சந்தைப்படுத்திவிட்டதும் நீங்களறிந்ததே.
(ஆதாரம்: https://www.horslicks.com/hi story)
தமிழர்களால் கண்டறியப்பட்டு தமிழர்களால் பெயர் சூட்டப்பெற்ற இந்தக் கதையைத் தெரிந்துகொண்ட நீங்கள் ஒரு குவளை குதிரைநக்கி அருந்தி பெருமிதமடைவீர்களாக.
(நகைச்சுவைக்காக, கற்பனையாகப் புனையப்பட்ட புனைவரலாறு)

சங்கச் சாயல் கலிவிருத்தம்


மன்றில் நேற்றென் மன்றல் போற்றி
குன்றின் தென்றல் நன்றாய் மாற்றி
வென்றார் இன்றார் என்றோள் ஏற்றி
அன்றில் இன்றென் முன்றில் நின்றது
திணை : குறிஞ்சி
கூற்று : வரைவு கூடியவழி மகிழ்ந்த தலைவி தோழிக்குக் கூறியது
பாவகை :கலிவிருத்தம்,
இயற்றியோர் : கனல்வனன் (நான்தானுங்க)

(ஓவியம் ; ஓவியர் இளையராஜா - நன்றி நண்பரே)

Tuesday, March 4, 2014

ஒன்றேபோல் சிந்திக்கும் சித்தி பெற்றிருக்கும் கவியுள்ளம்

தேர்தலைப் பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை "ஐந்தாண்டுக்கு ஒருமுறை". இக்கவிதை தொன்ம உத்திகொண்டு புனையப்பட்டது ; தமிழ்ச்சூழலில் மிகவும் பிரபலமானது; தமிழ்க்கல்விப்புலச் சூழலில் ஒவ்வொரு புதுக்கவிதை வகுப்பறையிலும் ஒருமுறையேனும் ஒலிக்கப்படுவது.

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)

இக்கவிதையினை அறிந்தோ அறியாமலோ இதே தொன்மத்தினைப் பயன்படுத்தி இதே தேர்தலினைக் குறித்து ஒரு கவிதை செய்திருக்கிறார் மலையாளக் கவிஞர் குரீப்புழ ஸ்ரீகுமார்.

தமிழில் பாரதிபுத்திரனால் மொழிபெயர்க்கப்பட்ட குரீப்புழ ஸ்ரீகுமாரின் தேர்தலறிக்கை என்னும் இக்கவிதை வி.எஸ். அனில்குமாரும் பாரதிபுத்திரனும் இணைந்து தொகுத்த மிளகுக்கொடிகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

ஏழு பகுதிகளாக விரியும் தேர்தலறிக்கை என்னும் கவிதையின் முதல் பகுதி இது.

சோளத்தின் நிறமும்
முட்டைக்கோசின் முகமுமுள்ள
தமயந்தி
கல்யாண மாலையோடு
வாக்குச் சாவடிக்குச் சென்றாள்.
ஐந்து நளன்கள்.
தமயந்தி
எல்லாத் தெய்வங்களையும் வேண்டினாள்
உண்மையான நளன் யாரென்று
அடையாளமில்லாத
ஐந்துபேரும்
போலிகளாயிருந்தனர்

கவியுள்ளம் ஒன்றேபோல் சிந்திக்கும் சித்தி பெற்றிருக்கும் என்பதற்கு இவ்விரு கவிதைகளையும் எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இரண்டு கவிதைகளும் அருமை.

(குரீப்புழ ஸ்ரீகுமாரின் இந்த முழுக்கவிதையும் அங்கதத்தில் தோய்ந்துள்ளது)

Monday, January 27, 2014

நான் சொன்னேன்ல நீ ஜெயிச்சுடுவன்னு


நேற்று என் மகனின் பள்ளியில் தந்தைகளுக்கான விளையாட்டுவிழா. பெற்றோர் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டிருந்தார்கள். கடந்த ஒருவாரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தான். பலமுறை மறுத்தேன் எனினும் என் மகனின் தீவிர வற்புறுத்தலினால் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன்.

இதற்கு முன்னால், பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும்போது குண்டெறிதல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறேன். (மொத்தம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம்.)
பின்னர் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் போது அதிர்ஷ்டக் கட்டம் போட்டியில் (நான்காய்ப் பிரிக்கப்பட்ட வட்டத்திற்குள் ஓடாமல் நடந்து விளையாடும் ஒருவகை மியூசிக்கல் சேர்) முதல்பரிசு பெற்றிருக்கிறேன்.
மற்றபடி விளையாட்டுப்போட்டிக்கும் எனக்கும் தொலைதூரம்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே 'கவலைப்படாதப்பா நீ கண்டிப்பா ஜெயிச்சுடுவப்பா' என்று ஊக்கப்படுத்திக்கொண்டே வந்தான். அவனுக்காகவாவது ஏதாவது பரிசு வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தாலும், "தம்பி பரிசு வாங்கனும்னு நினைக்கக்கூடாது. போட்டியில் கலந்துக்கறதுதான் முக்கியம். அப்பா உனக்காக கலந்துகொள்கிறேன்" என்று கூறிவைத்தேன்.

நான்கு போட்டிகளில் ஏதேனும் இரண்டில் மட்டும்தான் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் கூடைப்பந்தைக் கூடையிலிடும்போட்டியிலும் பந்தெறிதல் போட்டியிலும் கலந்துகொள்ள பெயர்கொடுத்திருந்தேன். (குண்டெறிதல் போட்டி, ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயம் என்பன மற்ற இரண்டு).
முதலில் தொடங்கியது ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயம். விசிலடிக்கப்பட்டதும் ஓடத்தொடங்கிய தந்தையில் ஒருவர் இரண்டடி தாண்டுவதற்குள் குப்புற விழுந்தார். மற்றொருவர் முப்பது மீட்டர் விரைவாய் ஓடித்தாண்டி அதன்பின் உருண்டு ஒரு இரண்டுமீட்டர் தாண்டி எழுந்தார். மெல்ல அங்கிருந்து நகர்த்தி கூடைப்பந்தைக் கூடையிலிடும் போட்டி நடக்கவுள்ள இடத்திற்கு அழைத்துச்சென்றேன்.

எட்டுப்பேர் மட்டுமே பெயர்கொடுத்திருந்தனர். போட்டி நடைபெறும்போது என் மகனும் என் மனைவியும் என் அருகிலேயே நின்றுகொண்டிருந்தனர். என் மனைவி எப்படிக் கூடையில் பந்தைக் குறிபார்த்து போடவேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள். 

கூடைப்பந்தைக் கூடையிலிடும் போட்டி தொடங்கியது. 

எட்டுப்பேர் கலந்துகொண்டதில் கொடுத்த வாய்ப்புகளில் ஒருமுறை கூடையில் இட்டதால் மூன்றாவது இடம் பெற்றேன். (எட்டுவாய்ப்புகளில் இரண்டுமுறை இட்டவர் முதற்பரிசு. பதினொரு வாய்ப்புகளில் இரண்டுமுறை இட்டவர் இரண்டாம் பரிசு)

கோப்பையும் சான்றிதழும் உடனே கொடுத்துவிட்டார்கள்.
வாங்கிய கோப்பையையும் சான்றிதழையும் மகன் கையில் கொடுத்தேன். 

'நான் சொன்னேன்ல நீ ஜெயிச்சுடுவன்னு வாப்பா அடுத்த போட்டிக்குப் போகலாம்' என்று அழைத்துச் சென்றான்.
வழியில் பார்த்த மாணவர்களில் சிலரும் ஆசிரியரில் சிலரும் என் மகனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
பந்தெறியும் போட்டி நடைபெறும் இடத்தில்  கூட்டம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக ஜெயிக்கமுடியாது என்று எனக்குத் தெரியும்.
மெதுவாக என் மகனிடம், "தம்பி வீட்டுக்குப் போகலாமா" என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்கவில்லை.
'போலாம்பா. மத்தவங்களும் பரிசு வாங்கணும்ல. வாங்க வீட்டுக்குப் போலாம்'

என்று சொல்லிவிட்டான்.
வுடு ஜூட்.

அப்ப இது

என் ஐந்தரை வயது மகன் கன்னல் இளம்பரிதி,
என் சட்டையில் பொத்தான் வரிசையில் உட்பக்கமாய்க் கூடுதலாய்த் தைக்கப்பட்டிருந்த பொத்தானைத் திருகிக்கொண்டு,
'இது எதுக்குப்பா வைச்சிருக்காங்க?' என்று கேட்டான்.

மற்ற பொத்தான்களைச் சுட்டிக்காட்டி 'இதிலொன்று உடைந்துபோனால் அதை எடுத்துவைத்துத் தைத்துக்கொள்ளலாம்' என்று சொன்னேன்.

பொத்தானைத் திருகுவதை விட்டுவிடாமல்
'அப்ப இது உடைந்துபோனா அதில ஒண்ணை எடுத்து இங்கு தைச்சுக்குவியா' என்று கேட்கிறான்.


அடக்கமுடியவில்லை சிரித்துவிட்டேன்.

Thursday, September 20, 2012

ஒரு நல்ல கவிதை

கேளாச் செவியை
உனக்குக் கொடுத்து
தூரக்குயிலைக்
கூவச்சொல்லியும்

குச்சியெடுத்து
எறும்பு துரத்திக்
குறுக்குநெடுக்காய்
ஓடவிட்டும்

புத்தகந் தூக்கிப்
பக்கம் புரட்டிக்
கோடுகள் பார்த்தும்

அலுத்துப் போச்சு

பூக்களைப் பற்றியோ
புழுக்களைப் பற்றியோ
ஒரு நல்ல கவிதை சொல்லேன்
இனியாவது

(கணையாழி, டிசம்பர் 1997 - இல் வெளிவந்த கவிதை)