நான்தான்

நான்தான்

Friday, July 15, 2011

எங்கே நிம்மதி

சுடுகாட்டுக்கு அருகிலும் வீடுகள்

நிம்மதியற்றுப்போயிற்று உறக்கம்

பிணங்களுக்கும்

Thursday, June 30, 2011

பல்லுயிர்ப்பெருக்கம்

மடிந்து நெளியும்

மண்புழுதானும்

மண்ணுக்காகும்

மண்ணுக்கானால் பயிருக்காகும்


ஊறும் கம்பளி

உடற்கூடு உடைத்து

அஞ்சிறைத்தும்பியாய்

கண்ணுக்காகும் கவினுடைத்தாகும்


நடுங்கிடச் செய்யும்

நச்சுடைப்பாம்பும்

திருட்டெலி கொன்று அதன்

தின்பொருள் காக்கும்


தன்னுடை ஓட்டைத்

தான்சுமந்து இரியும்

தன்னல நத்தைகள்

என்னத்துக்காகும்


உடையடா ஓட்டை

Tuesday, June 28, 2011

பாம்படம் – தமிழச்சி தங்கபாண்டியன் - ஓர் அவதானிப்பு


எழுத்தாளர் பிரபஞ்சனின் அணிந்துரையுடன் டிசம்பர் 2010இல் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுப்பு நூல். நான் முதலில் பிரபஞ்சனின் அணிந்துரையைப் படிக்கவில்லை, நேரடியாகக் கட்டுரைகளை வாசித்தேன். பின்னர் அணிந்துரையை வாசிக்கும்போது, கட்டுரைகளை வாசித்தபோது என் மனத்துள் பட்ட எண்ணங்களை, உணர்வுகளை, அப்படியே பிரபஞ்சனும் வெளிப்படுத்தியிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. பல நூல்களை வாசித்திருக்கும் படைத்திருக்கும் விமர்சித்திருக்கும் பிரபஞ்சனும் படிப்பதில் பால பாடம்கூட முடிக்காத நானும் எப்படி ஒத்துப்போனோம் என்ற ஆச்சரியம் அது.

இப்படி ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதித்தந்த பிரபஞ்சனுக்கு, இப்படி ஒரு நூல் வெளிவரக் காரணமாயிருந்த சூரியக்கதிர் இதழ் திரு ராவ் அவர்களுக்கும் திரு மரக்காணம் பாலா அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்தாருக்கும் வாசகன் என்ற முறையில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

முதல் நான்கு கட்டுரைகள் தமிழச்சியின் நிலைகுறித்த அவரது தன்னிலை விளக்கங்களாக தனித்து அமைகின்றன. ஆனால் அதன் பின்னர் வரும் அத்துணைக்கட்டுரைகளும் என்னளவில் அற்புதமானவை. அவை முன்வைக்கும் அந்தப் பெண்கள் அற்புதமானவர்கள். என்னைச் சுற்றிலும் அத்தகைய பெண்களே நிறைந்திருக்கிறார்கள் என்றாலும் அவர்களிடம் பொதிந்திருக்கும் அற்புதத்தன்மையை நான் உணர்ந்தவனாயில்லை. உணர்த்தியிருப்பது தமிழச்சியின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

ஒரே மூச்சாக, படித்து முடித்தேன் இந்த நூலை. இடையிடையே கண்ணில் ததும்பிய நீர்த்துளிகள் திரையிட்டு ஓய்வளித்தன வாசிப்புக்கு. ஆனால் மனம் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தது. அப்படியான இடைநிறுத்தங்கள் இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கின்றன. எனில் எப்படிச் சொல்வது நான் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன் என.

பிரபஞ்சன் எடுத்துக்காட்டிய முத்துராக்கின் அதே வரிகள் என்னுடைய விழிகளையும் ஈரமாக்கின. தன் காதல் மனத்தடக்கி ஒரு சொல்லில் வீறிட்டலறும் பெண்மனம் எனக்கும் வாய்த்திருக்கிறது. என்ன அவள் சாலையிலேயே அழத்தொடங்கிவிட்டாள்.

வலையன்குளக் கொத்தனாரம்மாவின் தெளிவான பார்வை சற்று யோசித்துப்பார்த்தால் தமிழச்சி முன்னிறுத்தும் பல பெண்களிடமும் இருக்கிறது.

ஆனைகள் வரும் அழகான தெருவில் வரும் அந்தத் ஏண்டி யானை பார்க்கவந்தாய் என அடிக்கவந்தது யானை பார்க்கத்தானே.

பிரபஞ்சன் கூறுவதுபோல் ஒவ்வொரு கட்டுரையும் தன்னுள் ஒரு கதைபொதிந்திருக்கின்றன. தமிழச்சியின் இயல்பான கவிதைத்தனங்களும் மறைந்திருக்கின்றன.

தமிழ்ப் பெண்ணியத்தின் இயல்புணர்த்தும் அவதானிப்புகள் நிறைந்திருக்கும் இந்த நூலை நான் வாசித்துப் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.