நான்தான்

நான்தான்

Wednesday, August 19, 2009

உமிழ்வின் வீச்சம்




உமிழ்ந்தது சோதித்து
உள்ளிருப்பு அறிவி


உமிழ்வது பலதிறம்
உமிழ்ந்ததும் பல நிறம்


உண்டது செரியாமை
பயிற்சி
உள்ளேயே தேனாக்கல்
முயற்சி


உண்ணாது உமிழ்தல்
ரோகம்
உண்டதாய் உமிழ்தல்
துரோகம்


கண்டு கேட்டு உற்று உண்டதெல்லாம்
உமிழ்ந்ததன் கண்ணே உள


முகர்ந்து பார்த்துரைக்க
முப்பது நொடி போதும்
மூழ்கி முத்தெடுக்க
முந்நூறும் போதாது


உண்டுண்டு உமிழ்ந்தோரே
உமிழ்வுண்ண சிறந்தோராம்


உமிழ்ந்தது சோதித்து
உள்ளிருப்பு அறிவி

(வைஸ்யா கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற பருவ இதழ் "மாணவர் சுடர்" -இல் வெளி வந்துள்ளது)

Tuesday, August 18, 2009

வெண்பாவும் உண்டு

அன்றாடங் காய்ச்சியாய் ஆகிவந்த பொய்யனாய்
பெண்டாட்டி தாசனாய் பேறுபெற்ற தாதையாய்
கொண்டாடும் கூத்தனாய் கூறுகெட்ட மாந்தனாய்
திணடாடும் வாழ்வு எனக்கு

எனது நூல்கள்






இவை இம்மட்டே - கவிதைத் தொகுப்பு
யானை பிழைத்த வேல் - கட்டுரைத் தொகுப்பு

Sunday, August 16, 2009

அவள் முன்பாய்

அந்த விளக்குகளை
அவள் காலடியில் வைக்காதீர்
அவள் விழிஈரம் கசியும்
முகம் காண இயலவில்லை

அந்த விளக்குகளை
அவள் தலைமாட்டில் வைக்காதீர்
அவள் நகத்தோரம் நெளியும்
நிழல் காண இயலவில்லை

அந்த விளக்குகளை
அவள் முன்பாய்
தகு தூரம் தள்ளி வையுங்கள்
இடையூறுகளின் அழகை
இமை மூடாது ரசிக்கலாம்

அந்த விளக்குகளை
தகு தூரம் தள்ளி வையுங்கள்
அவள் முன்பாய்

கவிதை புரியனுமா

வருங்காலத் தமிழ்க் கவிதை
சீனரிக்க மொழியில்தான்
எழுதப்படும்

புரிகிறதா
நீ

நச்சினார்க்கினியனின்
பேரனாகவோ பெயர்த்தியாகவோ இருக்கலாம்

புரியவில்லையா
நீ
ஒரு வருங்கால வாசகனாகி விட்டாய்

Saturday, August 15, 2009

கனவாய்

கனவிலும் அவள்

நினைவாய்த்தான் இருந்தேன்


நினைவிலும் அவள்

கனவாய்த்தான் இருந்தாள்

தந்தைப் புலம்பல்


பிறந்த வீட்டில்தான்
சிறந்து வளருமென
கங்கைகள் நினைக்கையில்
நீரில் மூழ்கியே

நிர்மூலமாவதாய்
சாந்தனுக்கள் புலம்புகிறார்கள்

வினவலின் தொலைவுக்குள்
விரிகிறது வாழ்க்கை

மர நிலா


அஞ்சி அஞ்சி

பின்தொடர்கிறது

மர நிலா