நான்தான்

நான்தான்

Monday, January 27, 2014

நான் சொன்னேன்ல நீ ஜெயிச்சுடுவன்னு


நேற்று என் மகனின் பள்ளியில் தந்தைகளுக்கான விளையாட்டுவிழா. பெற்றோர் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டிருந்தார்கள். கடந்த ஒருவாரமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தான். பலமுறை மறுத்தேன் எனினும் என் மகனின் தீவிர வற்புறுத்தலினால் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன்.

இதற்கு முன்னால், பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும்போது குண்டெறிதல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறேன். (மொத்தம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம்.)
பின்னர் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் போது அதிர்ஷ்டக் கட்டம் போட்டியில் (நான்காய்ப் பிரிக்கப்பட்ட வட்டத்திற்குள் ஓடாமல் நடந்து விளையாடும் ஒருவகை மியூசிக்கல் சேர்) முதல்பரிசு பெற்றிருக்கிறேன்.
மற்றபடி விளையாட்டுப்போட்டிக்கும் எனக்கும் தொலைதூரம்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே 'கவலைப்படாதப்பா நீ கண்டிப்பா ஜெயிச்சுடுவப்பா' என்று ஊக்கப்படுத்திக்கொண்டே வந்தான். அவனுக்காகவாவது ஏதாவது பரிசு வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தாலும், "தம்பி பரிசு வாங்கனும்னு நினைக்கக்கூடாது. போட்டியில் கலந்துக்கறதுதான் முக்கியம். அப்பா உனக்காக கலந்துகொள்கிறேன்" என்று கூறிவைத்தேன்.

நான்கு போட்டிகளில் ஏதேனும் இரண்டில் மட்டும்தான் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் கூடைப்பந்தைக் கூடையிலிடும்போட்டியிலும் பந்தெறிதல் போட்டியிலும் கலந்துகொள்ள பெயர்கொடுத்திருந்தேன். (குண்டெறிதல் போட்டி, ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயம் என்பன மற்ற இரண்டு).
முதலில் தொடங்கியது ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயம். விசிலடிக்கப்பட்டதும் ஓடத்தொடங்கிய தந்தையில் ஒருவர் இரண்டடி தாண்டுவதற்குள் குப்புற விழுந்தார். மற்றொருவர் முப்பது மீட்டர் விரைவாய் ஓடித்தாண்டி அதன்பின் உருண்டு ஒரு இரண்டுமீட்டர் தாண்டி எழுந்தார். மெல்ல அங்கிருந்து நகர்த்தி கூடைப்பந்தைக் கூடையிலிடும் போட்டி நடக்கவுள்ள இடத்திற்கு அழைத்துச்சென்றேன்.

எட்டுப்பேர் மட்டுமே பெயர்கொடுத்திருந்தனர். போட்டி நடைபெறும்போது என் மகனும் என் மனைவியும் என் அருகிலேயே நின்றுகொண்டிருந்தனர். என் மனைவி எப்படிக் கூடையில் பந்தைக் குறிபார்த்து போடவேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள். 

கூடைப்பந்தைக் கூடையிலிடும் போட்டி தொடங்கியது. 

எட்டுப்பேர் கலந்துகொண்டதில் கொடுத்த வாய்ப்புகளில் ஒருமுறை கூடையில் இட்டதால் மூன்றாவது இடம் பெற்றேன். (எட்டுவாய்ப்புகளில் இரண்டுமுறை இட்டவர் முதற்பரிசு. பதினொரு வாய்ப்புகளில் இரண்டுமுறை இட்டவர் இரண்டாம் பரிசு)

கோப்பையும் சான்றிதழும் உடனே கொடுத்துவிட்டார்கள்.
வாங்கிய கோப்பையையும் சான்றிதழையும் மகன் கையில் கொடுத்தேன். 

'நான் சொன்னேன்ல நீ ஜெயிச்சுடுவன்னு வாப்பா அடுத்த போட்டிக்குப் போகலாம்' என்று அழைத்துச் சென்றான்.
வழியில் பார்த்த மாணவர்களில் சிலரும் ஆசிரியரில் சிலரும் என் மகனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
பந்தெறியும் போட்டி நடைபெறும் இடத்தில்  கூட்டம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக ஜெயிக்கமுடியாது என்று எனக்குத் தெரியும்.
மெதுவாக என் மகனிடம், "தம்பி வீட்டுக்குப் போகலாமா" என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்கவில்லை.
'போலாம்பா. மத்தவங்களும் பரிசு வாங்கணும்ல. வாங்க வீட்டுக்குப் போலாம்'

என்று சொல்லிவிட்டான்.
வுடு ஜூட்.

No comments: