நான்தான்

நான்தான்

Wednesday, December 1, 2010

நிரஞ்சனாவும் எலியாய்ப்போன மாமாவும்

2009ஆம் ஆண்டு பிள்ளையார் சதுர்த்திக்கு நானும் நிரஞ்சனாவும்தான் குயவர் வீட்டுக்குப்போய் களிமண்பிள்ளையார் வாங்கிவந்தோம்.

சென்னையிலும் சரி, மதுரையிலும் சரி பிள்ளையார் சதுர்த்தியின் போது வீதிக்கு வீதி சுட்ட களிமண்பிள்ளையார்களும், அச்சில் அழுத்தி அப்போதைக்கப்போது தரப்படும் சுடப்படாத களிமண் அச்சுப் பிள்ளையாரும் விற்கப்படுவார்கள். அச்சுப்பிள்ளையார் வாங்கித்தான் எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவார்கள். கிணற்றில் போட்டால் இயல்பாய்க் கரைந்துபோக அதுதான் சரியாக இருக்கும் என்பது என் அம்மாவின் கருத்து.

ஆனால் சேலத்தில், நாங்களிருக்கும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் களிமண் பிள்ளையாரைத் தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்தது. அச்சில் அழுத்தி எடுக்கப்பட்ட பிள்ளையாரல்ல, கைப்பிடியாய்ப் பிசைந்து பிடிக்கப்பட்ட, பிள்ளையார் மாதிரியான, பிள்ளையார்தான் இங்கு கிடைக்கும். கடந்த ஆண்டு வாங்கியிருந்த அனுபவத்தில், நேரடியாக குயவர் வீட்டுக்குச் சென்று களிமண் பிள்ளையார் வாங்கி வந்தேன்.

என்னுடன் வந்த நிரஞ்சனாவுக்கு நாங்கள் வாங்கிய பிள்ளையாரை மிகவும் பிடித்துப்போயிற்று.

மாமா நான்தான் பிள்ளையாருக்கு குளிப்பாட்டுவேன்; பொட்டுவைப்பேன்; பூவைப்பேன்

என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாள். எல்லாம் எங்கள் அம்மா அவளுக்குச் சொல்லியிருந்தது. வீட்டுக்கு வந்தவுடன்

இப்பவே குளிப்பாட்டுறேன் என்று அடம்பிடித்தாள்.

அதெல்லாம் கிடையாது. சாயங்காலம்தான் குளிப்பாட்டணும்

என்று சொல்லி பிள்ளையாரைக் கொண்டுபோய் பூசையறையில் வைத்து, கதவைச் சாத்திவைத்தாயிற்று.

அப்படியும் எங்களுக்குத் தெரியாமல் பூசையறைக்குப் போய்ப் பிள்ளையாரைத் தூக்கிவர நிரஞ்சனா முயற்சி செய்துகொண்டே இருந்தாள். என் தங்கை பூசையறையில் பிள்ளையார் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இடையில் போய்த் தொந்தரவு செய்தால், தொந்தரவு செய்பவர்களை பிள்ளையார் எலியாக மாற்றி விடுவார் என்றும் பயமுறுத்திய பிறகுதான் சற்று ஓய்ந்தாள்.

அப்போது நண்பர் தர்மலிங்கம், தன் வண்டியை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டு ஊருக்குப் போவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்தார்.

நிரஞ்சனாவை வம்பிழுப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எப்படியோ தப்பித்துப்போய் உள்ளே படுத்தவள், அப்படியே தூங்கிவிட்டாள். தர்மலிங்கம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போயாயிற்று.

சிறிதுநேரம் கழித்து விழித்து எழுந்துவந்த நிரஞ்சனா, மீண்டும்

பிள்ளையாரைக் குளிப்பாட்டலாமா என ஆரம்பித்தாள்.

ஏதோ நினைத்தவளாய் தர்மலிங்கம் மாமா எங்கே என்று விசாரித்தாள். இதையே சாக்காக,

தர்மலிங்கம் மாமா, உன்னைய மாதிரிதான், நாங்க சொல்றதக் கேக்காம பிள்ளையாராக் குளிப்பாட்டுறேன்னு சாமி ரூமுக்குள் போனாரு, பிள்ளையார் சாமி அவர எலியா மாத்திட்டாரு

என்று சொல்லிவைத்தோம்.

அவளுக்கு அதிர்ச்சி. பூசையறைக்குள் போக முடியாத வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் தர்மலிங்கம் மாமா எலியானதில் ஒரு சந்தோசம்தான் அவளுக்கு. இனி வம்பிழுக்க மாட்டாருல்ல.

பிறகு சாயங்காலம் அவள் ஆசைப்படியே எங்கள் அம்மா பிள்ளையாரைப் பிடித்துக்கொள்ள, நிரஞ்சனா தன் கைப்பட நீரூற்றி பிள்ளையாரைக் குளிப்பாட்டினாள்; பொட்டுவைத்தாள்; பூவைத்தாள்.

மறுநாள் காலையில் நடந்ததுதான் சுவாரஸ்யம். காலையில் வீட்டுமுன்னிருந்த தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் நிரஞ்சனா. நாங்கள் எல்லாம் அங்குதான் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் வீட்டு வளாகத்தின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. தர்மலிங்கம்தான் வண்டியெடுக்க வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு விரைந்து அவரருகில் ஓடிப்போன நிரஞ்சனா அவரிடம் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

எப்ப மாமா மாறினீங்க?

எங்களுக்குச் சிரிப்பு தாளமுடியவில்லை. தர்மலிங்கம்தான் தான் எலியான கதை தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார்.

No comments: